உள்ளடக்கத்திற்குச் செல்
வரலாறு · உள்நாட்டுப் போர் (1983–2009) 12 ஜூன், 2026 6 நிமிட வாசிப்பு

2009-இல் எத்தனைத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்?

2009 இன் இறுதிப்போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏன் இன்னும் சர்ச்சைக்குரியதாக உள்ளது? ஐ.நா. கணக்கிட்ட குறைந்தபட்சம் உயிரிழப்பு மதிப்பீடு 7,721 முதல் 170,000 வரை.

பகிர்:

இலங்கைத் தீவின் நவீன வரலாற்றின் மிக முக்கியமான கேள்விகளில் 2009 இறுதிப்போரின்போது சிங்கள இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை என்பதும் ஒன்றாகும். இவ் எண்ணிக்கை, இலங்கை அரசின் வெளிப்பூச்சு மதிப்பீடான 10,000-க்கும் குறைவானோர் என்பது முதல், International Truth and Justice Project (2021) வெளியிட்ட தொகுப்பின் உச்சவரம்பான கிட்டத்தட்ட 170,000 என்பது வரை நீள்கின்றது. பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும் இதற்கு உறுதியான பதில் இல்லை என்பதே இதில் கவலைக்குரிய விடயமாகும். இந்த மதிப்பீடுகளுக்கிடையிலான இடைவெளி ஒரு தொழில்நுட்ப தவறு அல்ல, மாறாக இறந்தவர்கள் எப்படிக் கணக்கிடப்பட்டார்கள், யார் கணக்கிட மறுத்தார்கள் என்பதாகும்.

சுருங்கிக்கொண்டே சென்ற நிலப்பகுதி

2009 ஆண்டின் தொடக்கத்தில், சுமார் 330,000 தமிழ் பொதுமக்கள் வன்னியின் தொடர்ந்து சுருங்கிக்கொண்டிருந்த ஒரு பகுதியில் சிக்கியிருந்தனர். முன்னேறி வந்த இலங்கை இராணுவத்தின் தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியவர்களை, விடுதலைப் புலிகள் வெளியேற விடாமல் தடுத்தனர் என்று ஐ.நா. நிபுணர் குழு (2011) ஆவணப்படுத்தியது. தை முதல் வைகாசி வரை, அரசு ஒருதலைப்பட்சமாக மூன்று முறை அடுத்தடுத்து «No Fire Zones»-ஐ அறிவித்து, பொதுமக்களை அங்கு குவியுமாறு ஊக்குவித்தது. ஒவ்வொரு வலயமும் முந்தையதை விடச் சிறியதாக இருந்தது. மூன்றாவதும் இறுதியானதுமான வலயம், கரையாமுள்ளிவாய்க்காலுக்கும் வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் இடையிலான ஒரு குறுகிய கடற்கரைப் பகுதியாகும் (OHCHR 2015). அரசுப் படைகள் இந்த வலயங்களையும், முன்னணியில் இருந்த மருத்துவமனைகளையும், மேலும் ஒரு ஐ.நா. மையத்தையும், உணவு விநியோக வரிசைகளையும், அவற்றின் இருப்பிடங்கள் தெரிந்திருந்தும் திட்டமிட்டுத் தாக்கின என்று நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கனரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களின் பயன்பாட்டை நிறுத்துவதாக அரசு 2009 சித்திரை 27 இல் அறிவித்த பின்னரும், எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு பதிலாக இன்னும் தீவிரப்படுத்தியிருந்தனர் (OHCHR 2015).

கணக்கிடப்பட்ட குறைந்தபட்சம்

இந்த வலயத்துக்குள் கொல்லப்படடவர்களை கணக்கிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. ஆயினும் கொழும்பில் இருந்த ஐ.நா. ஊழியர்கள் ஒரு நெருக்கடி செயல்பாட்டுக் குழுவை உருவாக்கி, வேண்டுமென்றே கடுமையான கணக்கிட்டு முறையை பின்பற்றினர். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மரணத்திற்கும் பல சுயாதீன ஆதாரங்கள் தேவைப்பட்டன. இதன் விளைவாக, ஐ.நா.-வின் சொந்த உள்ளக மீளாய்வு (Petrie 2012) குறிப்பிட்டபடி, «கொல்லப்பட்ட பொதுமக்களின் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பட்டியல்» மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த பட்டியலின் படி 2009 மாசி 7 அளவில் குறைந்தபட்சம் 3,700 பொதுமக்கள் கொல்லப்பட்டோ காயமடைந்தோ இருந்தனர். அவர்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்தவர்கள். நிபுணர்கள் குழு மேற்கோள் காட்டிய ஒரு ஐ.நா. ஆவணதின்படி, 2008 ஆவணி முதல் 2009 வைகாசி 13 வரை 7,721 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக் கணக்கீடானது போர் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன், அதாவது இறுதிப்போரின் மிகக் கொடூரமான நாட்களுக்கு முன், இக் கணக்கிடு நிறுத்தப்பட்டது என இவ் ஐ.நா. ஆவணம் கூறுகின்றது.

இந்த உறுதிப்படுத்தப்பட்ட கணக்கீடு ஆரம்பத்திலிருந்தே குறைந்தபட்ச இறப்பு எண்ணிக்கையை தழுவியே இருந்தது. இக் கணக்கீட்டை அப்போது ஐ.நா. வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தது. ஐ.நா. வின் இந்த மௌனம் சர்வதேசத்தில் எமக்கான கவனத்தை ஈர்ப்பதற்கான தன்மையையும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கோரிக்கையையும் பலவீனப்படுத்தியது என்று ஐ.நா. நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறு கணக்கிட்டனர்

உண்மையான உயிரிழப்பை அணுகிக் கணிக்கும் வழிமுறையில் மருத்துவத் தரவைப் பயன்படுத்துவதும் ஒன்றாகும். இறுதி மாதங்களில் சுமார் 40,000 அறுவை சிகிச்சைகளும் 5,000 உறுப்பு நீக்கங்களும் செய்யப்பட்டன. இறப்பு–காயம் விகிதங்களின் படி 15,000 முதல் 22,500 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிகின்றது. இருப்பினும் நிபுணர்கள் குழுவின் நம்மகமான தரவின் படி, கொல்லப்படட பொதுமக்களின் எண்ணிக்கை 40,000 வரை செல்கின்றது.

ஒரு ஆண்டுக்குப் பிறகு, Charles Petrie தலைமையிலான ஐ.நா. உள்ளக மீளாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையின் படி 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மக்கள்தொகைக் கணக்கீடு மூலமான மதிப்பீடு

மிக முக்கியமான இறுதிப்போரில் கொல்லப்பட்டோர் தொகைக் கணக்கீடு, இறுதிப்போரின் முன் வன்னியில் எத்தனை பேர் இருந்தார்கள், எத்தனை பேர் போரின் பின் உயிருடன் வெளியே வந்தார்கள் என்பதை ஒப்பிடுவதன் மூலம் கிடைக்கின்றது. இலங்கை அரசின் கூற்றுப்படி, இறுதிப்போர் பகுதியில் அதிகபட்சம் சுமார் 70,000 பேர் மட்டுமே இருந்தனர் என்று வலியுறுத்தினர். அதே நேரத்தில் உள்ளூர் அரச அதிகாரிகளின் தரவுப்படி, 2008 ஐப்பசியில் வன்னி மக்கள்தொகை 429,000 ஆக இருந்துள்ளது. வன்னியை விட்டு வெளியேறிய பின் கிட்டத்தட்ட 280,000 பேர் தடுப்பு முகாம்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் (Petrie 2012). இறுதி யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டது, மனிதாபிமான உதவியை மட்டுப்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டது மட்டுமன்றி, அது போரில் கொல்லப்பட்டோர் அல்லது காணாமற்போனோரை கணக்கிடத் தேவையான அடிப்படையையும் சிதைத்தது என்று ஐ.நா. நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

2011 இல், மன்னார் ஆயர் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி 2008 ஐப்பசிகும் 2009 வைகாசிக்கும் இடையில் வன்னியில் 146,679 பேர் காணாமல்போயுள்ளனர். ஐ.நா. வின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் உலக வங்கித் தரவுகளை 2021 இல் ஆய்வு செய்த International Truth and Justice Project, இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 169,796 ஆக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டது. இதில் காணாமல்ப்போனோர் மற்றும் உறுதிப்படுத்தமுடியாமற்போன சிறப்புகளையும் உள்ளடக்குகின்றது. இதை உறுதிப்படுத்துவதற்க்கான எந்த ஒரு விசாரணையும் இலங்கை அரசாங்கத்தால் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

மறுப்புக் கொள்கை

இலங்கை அரசின் நிலைப்பாட்டின்படி இறுதிப்போரில் கொல்லப்படட பொதுமக்களின் எண்ணிக்கை 10,000 க்கும் குறைவானதே (Petrie 2012). ஒருசில இராணுவ உயர் அதிகாரிகள் இன்னும் ஒரு படி மேலே சென்று, இலங்கை இராணுவம் «பொதுமக்கள் உயிரிழப்பற்ற இறுதிப்போர்» என்ற கொள்கையை பின்பற்றியதாகக் கூறுகின்றனர். இருப்பினும் ஐ.நா. நிபுணர்கள் குழு இதற்கு நேர்மறையானதைக் கூறுகின்றனர். அதாவது பெரும்பாலான பொதுமக்கள் அரசுப் படைகளின் எறிகணைத் தாக்குதலூடாகவே கொல்லப்பட்ட்னர். 2015 ஆம் ஆண்டு OHCHR ஆல் நடத்தப்பட்ட விசாரணையிலும், பாதுகாப்பு வலயங்கள் மீதான அரசுப்படையின் தாக்குதல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு கோரிக்கையாக இருக்கும் பதில்

ஆகவே, 2009-இல் இறுதிப்போரில் மட்டும் எத்தனைத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதற்க்கு இரண்டு பகுதிகள் உள்ளன:

  1. ஆவணப்படுத்தப்பட்ட குறைந்தபட்சம்: கொல்லப்படடோர் கணக்கீடு இறுதி நாட்களுக்கு முன் நிற்பதற்கு முன் குறைந்தது 7,721 எண்ணப்பட்ட இறப்புகள், உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இதைவிட மிகவும் அதிகம்.
  2. ஓரளவு நம்பகமான பதில்: ஐ.நா.-வின் நிபுணர் குழுவின்படி 40,000. அதன் உள்ளக மீளாய்வின்படி 70,000-க்கும் மேற்பட்டோர் கணக்கில் காணப்படவில்லை. மன்னார் ஆயரின் மக்கள்தொகைத் தரவுகளின்படி 146,679 வரை. ITJP தொகுப்பின் படி கிட்டத்தட்ட 169,796 வரை கொல்லப்பட்டுள்ளனர் .

ஐ.நா. வின் கருத்துப்படி ஒரு உண்மையான, சுயாதீன விசாரணை மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, துல்லியமாக கொல்லப்படடோரின் எண்ணிக்கையை கணிக்க முடியும். இருப்பினும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் அது இன்னும் நடக்கவில்லை. இது நடக்கும் வரையில் இந்தக் கேள்வி பதிலளிக்கப்படாமல் மட்டுமல்ல, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உட்பட்ட்தாகவுமே இருந்துகொண்டு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில், முள்ளிவாய்க்காலிலும் ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகம் முழுவதிலும், இந்த பதில் கிட்டாத கேள்வி தொடர்ந்தும் நினைவுகூரப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

ஆதாரங்கள் & குறிப்புகள்

UN Panel of Experts (Darusman, Sooka, Ratner) (2011). Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka. United Nations

UN Internal Review Panel (Petrie) (2012). Report of the Secretary-General's Internal Review Panel on United Nations Action in Sri Lanka. United Nations

OHCHR (2015). Report of the OHCHR Investigation on Sri Lanka (OISL), A/HRC/30/CRP.2. United Nations

International Truth and Justice Project (2021). Death Toll in Sri Lanka. ITJP